திருவண்ணாமலைச் செப்பேடு

செப்பேட்டின் பெயர் - திருவண்ணாமலைச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - திருவண்ணாமலை
ஊர் - திருவண்ணாமலை
வட்டம் - திருவண்ணாமலை
மாவட்டம் - திருவண்ணாமலை
மொழியும் எழுத்தும் - தமிழ்-தமிழ்
வரலாற்று ஆண்டு - கி.பி.17-ஆம் நூற்றாண்டு
விளக்கம் -

தொடக்கத்தில் கிருதயுகம், த்ரேதாயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களும் அவற்றின் கால எல்லையும் குறிக்கப்பட்டு அண்ணாமலையார் முறையே ஜோதியாகவும், ரத்ன கிரியாகவும், சொர்ண ரூபமாகவும், சிவரூபமாகவும் ஒவ்வொரு யுகத்திலும் இருந்தார் என்று சொல்லப்பட்டு அண்ணாமலைத் தலத்தின் சிறப்புகள் சொல்லப்படுகின்றன. திருக்கோட்டு மகரிஷியின் திருத்தொடையில் பிறந்தவர்களாக 24 மனைச் செட்டிகள் பெருமைபடச் சொல்லப்பட்டு அவர்கள் பெற்ற விருதுகளும், அவர்களது 24 மனைகளும் சொல்லப்பட்டுள்ளன. இவர்கள் ஒன்றிணைந்து திருவண்ணாமலையில் 24 மனையார் தேசங்கா தர்ம மடம், நந்தவனம் ஆகியவை ஏற்படுத்தி வசந்தராய பண்டாரம் என்பவரை மடத் தலைவராக்கியுள்ளனர். மடத்தினை நிர்வகிக்கும் செட்டியார் பொறுப்பு வம்மிய கோத்திரம் அண்ணாமலை செட்டியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மடம், நந்தவனம் நிர்வாகச் செலவுகளுக்காக தலைக்கட்டுக்கு ஒரு பணம், கல்யாண முகூர்த்தத்துக்கு ஒரு பணம், பொதி ஒன்றுக்கு அள்ளுக்கால் படி, மகமை ஒரு பணம் வீதம் கொடுக்க ஒப்புக் கொண்டனர். மேலும் மடச்செட்டியார், சங்கீதக் காரன், மாணிக்கத்தாள் (நாட்டியமகள்) விடுதி மாணிக்கத்தாள் கலியானங்களுக்குப் பணமும், அள்ளு கால்படியும் கொடுக்கச் சம்மதித்துள்ளனர்.

குறிப்புதவிகள் - தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005